Wednesday, January 28, 2009
சுஜாதா வி மிஸ் யு
சுஜாதா பற்றி பாலுமகேந்திரா சாலிகிராமத்திற்கு வேறு வேலையாகப் போயிருந்த நாம், அப்படியே பாலுமகேந்திராவையும் சந்திக்க நேர்ந்தது. நாம் போன சமயம் சில போட்டோக்களை வைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார். ஒரு மேல்நாட்டு நாயின் பல தரப்பட்ட போஸ்கள். ''ரொம்ப அழகா இருக்கு சார். உங்க நாயா?'' என்று கேட்டோம்.
''இல்லை. எழுத்தாளர் சுஜாதாவோட நாய்'' என்றார்.
இதைத் தொடர்ந்த பாலு மகேந்திராவுடனான நீண்ட உரை யாடலின் சுருக்கம்:_
''போன டிசம்பர்ன்னு நெனைக்கறேன். மனசளவில் நான் ரொம்பவும் உடைஞ்சு போயிருந்த ஒரு நாள். அந்த மாதிரி சமயங்கள்ல நேரா என் ரங்காகிட்டப் போய் நிக்கறதுதான் என் வழக்கம். உங்க எல்லாருக்கும் அவர் சுஜாதா. எனக்கு அவர் ரங்கா.
'எனது பால்யகால நண்பர்களெல்லாம் என்னை ரங்கான்னுதான் கூப்பிடுவானுங்க. அவனுங்கெல்லாம் செத்துப் போயிட்டானுங்க. இப்போ பாலு மட்டும்தான் என்னை ரங்கான்னு கூப்பிட்டுக்கிட்டிருக்காரு.' கற்றதும் பெற்றதும் தொடர்ல இப்படிப் பதிவு பண்ணியிருந்தார்.
முப்பது வருஷ நட்பு. ரொம்ப நெருக்கம். அவரை என் கூடப் பொறந்த அண்ணனாத்தான் நான் நெனச்சேன்.
'பாலுவுக்கும் எனக்குமான நட்பு வாழ்வின் சுக துக்கங்களுக்கு அப்பாற்பட்டது' அப்படின்னு இன்னுமொரு கட்டுரையில எழுதியிருந்தார். மனசு நெறைஞ்ச துக்கத்தோட அவர் முன்னாடி போய் நின்னதுதான் தெரியும். உடைஞ்சு அழுதிட்டேன். குழந்தை மாதிரி தேம்பித் தேம்பி அழுதுக்கிட்டிருந்த என் கையைப் புடிச்சுத் தன் கைக்குள்ள பொத்தி வெச்சுக்கிட்டு அழுது முடியட்டும்ன்னு அமைதியா உக்காந்திருந்தார். என் அழுகை கொஞ்சம் நின்னதும், ரொம்பவும் கனிவான குரல்ல என் முகத்தப் பார்த்துக் கேட்டார். 'என்னப்பா ஆச்சு?' சொன்னேன்.
ரொம்ப ரொம்ப நம்பிக்கையான ஒருத்தர் எனக்குச் செய்திருந்த வஞ்சனை, ரங்காவையும் அதிர்ச்சிக் குள்ளாக்கியிருக்கணும். ஆனா, அத வெளிக்காட்டிக்கல்ல. அவர் கைக்குள்ள இருந்த என் கையை இன்னும் கொஞ்சம் இறுக்கிக் கிட்டுச் சொன்னார்...
''பாலு, நீ பாக்காத, பிரச்சினையா? நீ அனுபவிக்காததுக்கமா? எல்லாத்தையும் கடந்து வந்தவனில்லையா நீ? அதெல்லாத்துக்கும் முன்னாடி இது ஜுஜுபி... This is nothing..... தூக்கிக் கடாசிட்டுப் போயிட்டே இரு. Don't let this unworthy person ruffle you.நீ செய்ய வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கு. ஒரு Heart Problem ஒரு Stroke/ இது ரெண்டுக்கப்புறமும் நீ ஜம்முன்னு நடமாடிக்கிட்டிருக்கே. Isn't this wonderful. Be happy that you are alive Balu. உன்னை நெஞ்சுக்குள்ள வெச்சுப் பூஜிக்கற நிறையப் பேர் இருக்காங்க. அவங்களுக்காக நீ செய்ய வேண்டிய வேலைகள் நிறைய இருக்கு. You Still Can Create Magic.
உன் 'வீடு', 'சந்தியாராகம்' மாதிரி நீ இன்னும் ஒரு அஞ்சாறு படங்களாவது பண்ணணும். So don't let these stupid things bother you. You are a king Balu. Don't you ever forget that. அதுக்கப்புறம் அவரோடு ஒரு அரைமணி நேரம் உட்கார்ந்து, மாமி போட்டுக் குடுத்த டிகிரி காப்பி சாப்பிட்டுத் திரும்பி வர்ரப்போ மனசு ரொம்ப லேசாயிட்ட மாதிரி ஒரு feeling. என் ரங்காவை நான் கடைசியாப் பாத்தது அன்னிக்குத்தான். ''Be happy that you are alive Balu'' ன்னு சொன்ன என் ரங்கா இப்போ இல்லை.
அவர் இறுதிச் சடங்குகளுக்குப் போய் வந்ததோட சரி. அதுக்கப்புறம் அவர் வீட்டுக்குப் போகல்ல. அந்தம்மாவைப் பாக்கற தைரியம் இன்னும் வரல்ல. ஆறுதல் சொல்றதுக்குன்னு போய், அவங்க முன்னாடி நானே உட்காந்து அழுதிட்டு வர இஷ்டமில்லை. நேத்து ஆஃபீஸ்ல எதையோ தேடுறப்போ மிம்மியோட இந்த போட்டோஸ் கண்ல பட்டுது. 'மிம்மி'ங்கறது ரங்கா வீட்டில் வளர்ந்த செல்லப்பிராணியின் பெயர். பெண் நாய், டேஷ் ஹவுண்ட் ஜாதி.
அவரைவிட மிம்மி மேல அந்தம்மாவுக்குப் பாசம் அதிகம். செல்லம் அதிகம். 'மிம்மி'யோட முதல் பிரசவம் அவங்க மடியிலேயே நிகழ்ந்ததுன்னா பாருங்களேன். பழைய பெட்ஷீட் ஒண்ணை மடியில விரிச்சுப் போட்டு, பிரசவ வலி கண்ட மிம்மியைத் தூக்கி மடியில வெச்சுக்கிட்டாங்க. ஏழெட்டு வருஷத்துக்கு முன்னாடி நடந்த ஒரு விஷயம்... மிம்மியை வீட்ல தனியா விட்டுட்டுப் போகணுமேங்கறதுக்காகவே, அமெரிக்காவில் இருக்கற மகன்களைப் பார்க்கப் போறதைத் தள்ளிப் போட்டுக்கிட்டு வந்தாங்க.
விஷயம் தெரிஞ்சதும் நான் சொன்னேன்:_
''நீங்க ரெண்டு பேரும் சந்தோஷமா அமெரிக்கா போய் பசங்களைப் பாத்திட்டு வாங்க. நீங்க வர்ர வரைக்கும் மிம்மியை நான் என் வீட்ல வெச்சுப் பாத்துக்கறேன்.''
ரங்காவும், மாமியும் அமெரிக்கா போய் வர்ற வரைக்கும் ஆறு ஏழு மாசம் மிம்மி எங்க வீட்லதான் இருந்திச்சு. எங்க சுப்பிரமணியோட சேத்து மிம்மியையும் பாத்துக்கிட்டோம். சுப்பிரமணின்னா _ 'மூன்றாம் பிறை'ச் சுப்ரமணி. வளர்ந்து பெரியவனாகி எங்க கூடத்தான் இருந்தான். மிம்மி பெண் நாய் என்கறதால சண்ட சச்சரவில்லாம நல்ல சினேகிதமாவே இருந்திச்சுங்க. சுப்பு இவனைப் பாலியல் கண்ணோட்டத்தில அணு காமல் பார்த்துக் கொள்வது எனக்கும், அகிலாவுக்கும் பெரிய வேலையாகிவிட்டது. ரங்காவும் மாமியும் அமெரிக்காவில இருந்து வந்ததுக்கப்புறம், மிம்மியை அவங்களுக்குத் திருப்பிக் குடுக்க என் அகிலாவுக்கு மனசே இல்லை. ஒருபடியா அவளைச் சமாதானப்படுத்தி மிம்மியைக் கொண்டு போய்க் குடுத்திட்டு வந்தேன்.
இப்போ என் ரங்கா இல்லை. சுப்பிரமணி இல்லை. மிம்மியும் இல்லை. முதல்ல போனது சுப்பிரமணி. அதுக்கப்புறம் மிம்மி. போன பெப்ரவரியில ரங்கா...'' தொடர்ந்து பேசிக்கொண்டே வந்த பாலுமகேந்திரா மேற்கொண்டு பேசமுடியாமல் நிறுத்தி கண்கலங்கு கிறார்..
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment